இந்தியர்கள் பெயரில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகின்றனர்: டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவ்ரோ புதிய குற்றச்சாட்டு
நியூயார்க்: இந்திய மக்கள் பெயரில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் என்றும் அதை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவ்ரோ குற்றம் சாட்டினார். அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில்,‘‘பிரதமர் மோடி மிக சிறந்த தலைவர். மோடி உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை வழிநடத்துகிறார். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங்குடன் ஏன் சேர்ந்து உள்ளார் என்பது புரியவில்லை.
ரஷ்யாவிடம் இருந்து முன்பு இந்தியாஅதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கவில்லை. இப்போது ரஷ்ய நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் தருவதால் இந்தியா வாங்கி சுத்திகரித்து பல நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்கிறது. இந்திய மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். அதை நிறுத்த வேண்டும்,” என்றார்.