காதலனை அடித்து விரட்டிவிட்டு இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம்: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே பாலாற்றங்கரையில் தனியாக இருந்த காதல் ஜோடியில் காதலனை அடித்து விரட்டிவிட்டு, இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட நவ்லாக் பகுதியில் அரசு பண்ணைகள் இயங்கி வருகிறது. இந்த பண்ணை அருகே பாலாறு செல்கிறது. நேற்று முன்தினம் இரவு நவ்லாக் அருகே உள்ள பாலாற்றங்கரையையொட்டி ஒரு காதல் ஜோடி தனியாக பேசிக்கொண்டிருந்தனர்.
காதல் ஜோடி இருப்பதை பார்த்த 3 பேர், அங்கு சென்று அவர்களிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் வாலிபரை அங்கிருந்து அடித்து துரத்திவிட்டு இளம்பெண்ணை மிரட்டி 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இளம்பெண் தனக்கு ேநர்ந்த பாலியல் கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து சிப்காட் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் எஸ்பி அய்மன் ஜமால் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.