தடை செய்யப்பட்ட ரேட்வில்லர் நாய் கடித்து சிறுவன் படுகாயம்
*உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே நாய் கடித்து 13 வயது சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அமைச்சார் கோயில் தெருவில் வசித்து வருபவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேஷ். இவரது மகன் மகேந்திரவர்மன் (13). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றபோது, அதே தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் வளர்த்து வந்த தடை செய்யப்பட்ட ரேட்வில்லர் என்ற நாய், சிறுவன் மகேந்திரவர்மனை கடித்து குதறியுள்ளது. இதில் வயிறு, முதுகு பகுதியில் பலத்த காயம் அடைந்த சிறுவன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட ரேட்வில்லர் நாய் கடித்து சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று தடை செய்யப்பட்ட நாய்கள் வளர்க்கும் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.