உலகின் சிறந்த பவுலரின் உடல்நிலை முக்கியம் இல்லையா? பும்ரா குறித்து விமர்சிப்பது முட்டாள்தனம்: பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் காட்டம்
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். பணிச்சுமை காரணமாக கடைசி மற்றும் முக்கியமான 5வது டெஸ்ட் போட்டியிலிருந்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. இது, ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது. வீரர்கள் போட்டிகளைத் தேர்வு செய்து விளையாடுவதை இனி அனுமதிக்காது என்று பிசிசிஐ மறைமுகமாக பும்ராவைக் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், பும்ராவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் இதுகுறித்து கூறியதாவது: பும்ராவுக்கு எதிராக இதுபோன்ற பேச்சுக்கள் எழுவதைக் கேட்கவே வருத்தமாக இருக்கிறது.
அவருக்கு முதுகுப் பகுதியில் மிகத் தீவிரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது, இனி அவர் எப்போதுமே நலமாக இருப்பார் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. இப்போது அவரது முதுகில் உள்ள காயம் மிகவும் தீவிரமானது. சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்று பும்ரா புகழப்பட்டார். இப்போது அவர் மீது அநியாயமாக விமர்சனம் வைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே அவர் 3 போட்டிகளில் தான் விளையாடுவார் என்று ஏன் அறிவிக்கப்பட்டது தெரியுமா? இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுகளைத் தடுப்பதற்காகத்தான். இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லையா? 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகின் தலைசிறந்த ஒரு பவுலரின் உடல் நிலை குறித்து கவனமாக இருப்பது, இத்தருணத்தில் மிகவும் அவசியமானதாகும். இத்தகைய நேரத்திலும், அவர் இந்திய அணிக்காக விளையாடும் இந்த முயற்சியைப் பாராட்ட வேண்டும். இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்த பும்ரா போன்ற ஒரு முக்கிய வீரர் மீது, அவரது காயம் மற்றும் பணிச்சுமையைப் புரிந்து கொள்ளாமல் வைக்கப்படும் விமர்சனங்கள் நியாயமற்றது. இவ்வாறு அவர் கூறினார். பரத் அருணின் இந்த கருத்துக்கு பல கிரிக்கெட் வல்லுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதை ரசிகர்களும், சில முன்னாள் வீரர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.