நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மறுபுறம், எந்தவொரு பிரச்னை குறித்தும் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும், நாடாளுமன்றத்தை அமைதியாகச் செயல்பட அனுமதிக்குமாறும் ஒன்றிய அரசு மற்றும் பாஜக தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தை முன்னதாக ஏற்றுக்கொண்டிருந்த நிலையில், துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர், உடல்நிலையைக் காரணம் காட்டி நேற்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, எரிந்த ரூபாய் நோட்டுக்கள் சர்ச்சையில் சிக்கியுள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக்கோரி சுமார் 200 எம்.பி.க்கள் அளித்த தீர்மானத்தையும் ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டு, மேல் நடவடிக்கைக்கு அனுப்பியிருந்தார். ஆனால் ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா விவகாரம் நாடு முழுவதும் அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. இந்நிலையில் இன்று பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் பிரச்னை குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும், மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கும் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்தனர். ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் மிருத்யுஞ்சய் திவாரி மற்றும் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஆகியோர் கூறுகையில், ‘ஜெகதீப் தன்கர் அழுத்தத்தின் காரணமாகவே ராஜினாமா செய்துள்ளார்’ என்று குற்றம்சாட்டினர்.
ஆனால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘ராஜினாமாவுக்கான காரணம் அவருக்கோ அல்லது ஒன்றிய அரசுக்கோ தான் தெரியும். இதில் நாங்கள் எதுவும் கூறவில்லை’ என்று கூறினார். அதேபோல் பாஜக மூத்த எம்.பி ஜகதாம்பிகா பால் கூறுகையில், ‘எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது. இந்தியப் படைகளின் வீரத்தை அனைவரும் கொண்டாட வேண்டும்’ என்று தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில், ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து ெகாண்டனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் போர் நிறுத்தம் தொடர்பான டொனால்டு டிரம்பின் கருத்துகள், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த செயல்முறை, தொகுதி மறுவரையறை, தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகள், ஏர் இந்தியா 171 விமான விபத்து, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி அவையில் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இரு அவைகளும் கூடியது. மக்களவையில் அதன் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவையில் துணை தலைவர் ஹரிவன்ஷ் அவை நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தனர். இரு அவைகளும் கூடிய சில நிமிடங்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர்.
அதனால் இரு அவைகளும் பிற்பகல் 12 மணி, மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவைகளில் இருந்து வெளியேறிய எதிர்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற நுழைவு வாயில் வளாகத்தின் முன் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், திமுக எம்பி கனிமொழி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி மிசா பாரதி உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். டெல்லியில் மழை பெய்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்து கொண்டும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து 2 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. எதிர்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் முடங்கியது. அவையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை (ஜூலை 23) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.