தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் குட்டை டேலியா மலர்கள்
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள குட்டை டேலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.இரண்டாம் சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த ஒன்றரை மாதங்களாக வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பயணிகள் வரவேற்கும் விதமாக தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டன.
இத்தாலியன் பூங்கா மற்றும் பெர்ன் பூங்காவில் மலர் தொட்டிகளைக் கொண்டு சிறு சிறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டன. இது தவிர 15 ஆயிரம் தொட்டிகளை கொண்டு மாடங்களில் பல்வேறு வண்ணங்களை கொண்ட மலர் செடிகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.
இம்முறை மேரிகோல்டு, பேன்சி, சைக்ளோமென், டெய்சி, ஜெர்பரா, குட்டை டேலியா உட்பட பல்வேறு புதிய மலர் செடிகளும் மலர் அலங்காரத்தில் வைக்கப்பட்டன. பொதுவாக டேலியா மலர்கள் நீண்ட செடிகளில் பெரிய அளவிலான மலர்களாக காட்சியளிக்கும்.
ஆனால், இந்த குட்டை டேலியா மலர்கள் சிறிய செடிகளில் ஒரே ஒரு இதழ்களைக் கொண்டு அழகாக காட்சியளிக்கிறது.பல்வேறு வண்ணங்களில் பூத்துள்ள இந்த குட்டை டேலியா மலர்கள் தற்போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது.