எல்லை பிரச்னையால் மயானச் சாலையை சீரமைப்பதில் சிக்கல்
திருவாடானை : திருவாடானை அருகே பாரதிநகர் பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசித்து வரும் அனைத்து சமுதாய மக்களின் பயன்பாட்டில் உள்ள சமத்துவ மயானத்திற்கு செல்லும் சாலையானது 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த மயானத்திற்கு செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக கல்லூர் ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மயானத்திற்கு செல்லும் சாலை வருவாய்த்துறை கிராம கணக்கில் திருவாடானை ஊராட்சி எல்லைக்குள் வருவதாகக் கூறி இந்த மயானச் சாலையை திருவாடானை ஊராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி மெட்டல் சாலையும் அமைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் கல்லூர் ஊராட்சி பாரதிநகர் பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களின் சமத்துவ மயானமாக தற்சமயம் வரை இந்த இடம் இருந்து வருகிறது. இதனால் கல்லூர் ஊராட்சியின் பயன்பாட்டில் உள்ள மயானத்திற்கு திருவாடானை ஊராட்சி எல்லையில் வரும் மயானச் சாலையை சீரமைத்துத் தர இந்த இரு ஊராட்சி நிர்வாகமும் எல்லைப் பிரச்னையால் அந்தப் பணியை கிடப்பில் போட்டுள்ளது.
மேலும் இந்த மயானத்திற்கு செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் குப்பைகள் மற்றும் கோழிக் கழிவுகளை கொண்டு வந்து இங்கு கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் இங்குள்ள 2 ஊராட்சி நிர்வாகமும் எல்லைப் பிரச்னையால் இந்த மயானச் சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளது.
ஆகையால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமான இந்த மயானச் சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்:
இந்த மயானச்சாலை கடந்த பல ஆண்டுகளாக கல்லூர் ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருவாடானை ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த மயானச் சாலை அமைந்துள்ளதாகக் கூறி திருவாடானை ஊராட்சி நிர்வாகம் இந்த சாலையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தி ரூ.1லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைத்துள்ளது. ஆகையால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மயானத்திற்கு செல்லும் சாலை பராமரிக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது.
மேலும் இந்த மயான சாலையின் நுழைவு வாயிலில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் குப்பைகள் மற்றும் கோழிக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் செல்வோர் மீது முகம் சுழிக்க வைக்கிறது.
இந்த கழிவுகளை தின்பதற்காக அங்கு வரும் பன்றிகள் கூட்டமாகச் சென்று அந்தக் கழிவுகளை கலைத்து விடுவதால் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. ஆகையால் இந்த 2 ஊராட்சிகளின் எல்லைப் பிரச்னையால் பராமரிப்பு இன்றி கிடப்பில் போடப்பட்ட இந்த மயானச் சாலையை உடனடியாக சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறினர்.