ரூ.20க்கு ‘ஜனதா கானா’ முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு: தெற்கு ரயில்வேயில் அறிமுகம்
சென்னை: தெற்கு ரயில்வேயில் ரூ.20க்கு ‘ஜனதா கானா’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நகரின் பல ரயில் நிலையங்களில் ‘ஒன் ஸ்டேஷன் ஒன் தயாரிப்பு’ ஸ்டால்கள் மூலம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வே, இப்போது முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் ‘ஜனதா கானா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘ஒன் ஸ்டேஷன் ஒன் தயாரிப்பு’ ஸ்டால்களின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சிக்கன உணவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம், முன்பதிவு செய்யாத பயணிகள் நடைமேடையை விட்டு வெளியேறாமலேயே ரூ.20 மலிவு விலையில் உணவு வாங்குவதை சாத்தியமாக்குவதாகும். இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்ததாவது:
விற்பனையாளர்கள் மூலம் விற்கப்படும் இந்த உணவு, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் சந்திப்பு மற்றும் காட்பாடி உள்ளிட்ட 27 ரயில் நிலையங்களில் தற்போது கிடைக்கிறது. பாரம்பரிய ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்களுடன், ஆரோக்கியமான விவசாய உணவுகளை விற்பனை செய்து உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் ‘ஒன் ஸ்டேஷன் ஒன் தயாரிப்பு’ கடைகள், புறநகர் ரயில் பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
தெற்கு ரயில்வே நகரம் முழுவதும் 62 நிலையங்களில் 84 கடைகள் செயல்பட அனுமதித்துள்ளது. இந்த கடைகளில் பாரம்பரிய சிற்றுண்டிகள், காஞ்சிபுரம் பட்டு புடவைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ‘ஒன் ஸ்டேஷன் ஒன் தயாரிப்பு’ மற்றும் சிக்கன உணவுத் திட்டத்துடன் கூடுதலாக, வார இறுதி நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே தற்காலிக கடைகளை தொடங்கியுள்ளது. நெரிசலான சில நிலையங்களில் இந்த முயற்சி தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.