புத்தக திருவிழா நாளை வரை நீட்டிப்பு ரூ.26.27 லட்சம் மதிப்பிலான 29 ஆயிரம் புத்தகங்கள் விற்பனை
*திருப்பத்தூர் கலெக்டர் தகவல்
திருப்பத்தூர் : புத்தக திருவிழாவில் இதுவரை ரூ.26.27 லட்சம் மதிப்பிலான 29 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையானது என கலெக்டர் சிவசவுந்திரவல்லி பேசினார். திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில், மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் இணைந்து 5ம் ஆண்டு புத்தகக் திருவிழா 60க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் நடத்தியது.
இதன் நிறைவு நாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கலெக்டர் சிவசவுந்திரவல்லி தலைமை தாங்கி, நாள்தோறும் சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறைகளை சார்ந்த 117 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசாக புத்தகங்களை வழங்கினார்.
முன்னதாக, நிறைவு நாளில் மாலை 5 மணி முதல் மங்கள இசை நிகழ்ச்சியுடன், எம்.ஜி.எம்.சரவணன் கலைக்குழுவினரின் கிராமியக்கலை நிகழ்ச்சி, சுப்புலட்சுமியின் ‘நம்ம ஊர்க் கதைகள்’ என்ற தலைப்பில் கருத்துரை, மாலை 6.30 மணிமுதல் 7.30 மணி வரை சென்னை மாவட்ட நூலக ஆணை குழு தலைவர் மனுஷிய புத்திரனின் ‘அறிதலே வாழ்வு, தெளிதலே தெய்வம்’ என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெற்றது. இவ்விழாவில் கலெக்டர் சிவசவுந்திரவல்லி பேசியதாவது:
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு, தமிழ்நாட்டின் 2வது நகராட்சியான வாணியம்பாடி நகராட்சி நமது மாவட்டத்தில் தான் உள்ளது. திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில், நடந்து வரும் 5ம் ஆண்டு புத்தக திருவிழா வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புத்தகக் திருவிழாவின் முக்கிய நோக்கம், எழுத்தாளர்களை ஊக்குவித்தலும், கல்வி கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்தலுமே ஆகும். இவ்விழாவில் 16,272 வாசகர்கள் வருகை தந்துள்ளனர்.
சுமார் ரூ.26 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 29 ஆயிரத்து 749 புத்தகங்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், நூல் ஆர்வலர்கள் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, புத்தக திருவிழா 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, புத்தகங்களை வாங்கி முன்னேற் வேண்டும்.
10 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் வழங்கிய கலை பண்பாட்டு துறையின் அனைத்து கலைஞர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும், இவ்விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் எனது பாராட்டுகள். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, திருப்பத்தூர் நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா, உதவி இயக்குநர் ஊராட்சிகள் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) சென்னகேசவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தக்ஷராஜபிரகாஷ், மாவட்ட நூலக அலுவலர் பிரேமா, சேது சொக்கலிங்கம், உள்ளூர் பேச்சாளர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.