பூபி (Booby)
பூபி (Booby) என்பது ஒரு கடற்பறவை. இவை கேன்னட்டு என்னும் பறவையினத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவை. கிழக்கு பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதிகளில் வாழும் பறவை இனங்களில் ஒன்று. இதன் நீலநிறக் கால்களைக் கொண்டு, இவற்றை எளிதாக அடையாளம் காணமுடியும். இந்தப் பறவையின் ஆண்பறவையைவிட பெண் பறவை பெரியதாக இருக்கும். இது இறக்கையை விரித்துப் பறக்கும் நிலையில் 1.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஆண், பெண் இரு பறவைகளும், அடர் பழுப்புநிற இறக்கைகள், நீல நிறக் கால்கள், வெள்ளை நிற அடிப்பகுதியைப் பெற்றிருக்கும். இவற்றின் தலையும், கழுத்தும் தனித்துவமான நிறத்தைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பறவையின் கண்களில் மஞ்சள் நிறம் ஒளிர்விடும். பெண் பறவையை விட ஆண் பறவையின் கண்களில் மஞ்சள் நிறம் அதிகமாகத் தென்படும்.
ஆங்கிலப் பெயரான பூபி என்பது முட்டாள் எனப் பொருள் தரும் போபோ என்னும் எசுப்பானிய மொழிச்சொல்லில் இருந்து பெறப்பட்டது. ஏனெனில் இவை தாமாகவே பறந்து வந்து கடற்பயணத்தில் உள்ள கப்பல்களில் வந்து அமர்வதால் கப்பல் மாலுமிகளால் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு உணவாகின்றன. இவற்றின் உணவுப் பட்டியலில் மீன்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தப் பறவை சுமார் 12 பறவைகள் இணைந்த குழுவாகச்சேர்ந்து கடற்பரப்பின் மேல் நீந்தும் மீன்களை வேட்டையாடும். சில சமயங்களில் தனித்தும் தன்னுடைய வேட்டையை நடத்தும்.
பூபிகள் உயரத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்து நீருக்கடியில் உள்ள இரையைப் பிடிக்கின்றன. இவற்றில் முகத்தில் உள்ள காற்றுப் பைகள் நீரில் மோதும்போது ஏற்படும் அடியைத் தாங்க உதவுகின்றன. சிலசமயம் கடல்நீரின் மேற்பரப்பில் தென்படும் மீன்களை மேலே பறந்தபடி உற்று நோக்கிப் பாய்ந்து கவ்விப் பிடிக்கும். இந்தப் பறவை அதிகபட்சமாக 100 அடி உயரத்தில் இருந்து கூட `டைவ்’ அடிக்கும். அப்போது தன்னுடைய உடலை ஒரு அம்பு பாய்வதைப் போல நேர்க் கோட்டில் வைத்திருக்கும். இவை தீவுகளிலும் கடற்கரைகளிலும் கூட்டமாக வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. பூபிகள் பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெளிர்நீல முட்டைகளை தரையிலோ சில சமயங்களில் மரத்தில் உள்ள கூடுகளிலோ இடுகின்றன.