ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அலுவலகத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்தியா முழுவதுமே அண்மையில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அது புரளி என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் வானிலை ஆய்வு மையத்துக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பெயரிலும் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து இரு இடங்களிலும் ஊழியர்கள் வெளியற்றப்பட்டு மோப்ப நாய் உதவியுடன் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மிரட்டல் குறித்து காவல்துறையினரும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.