பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பல்லாவரத்தில் பரபரப்பு
பல்லாவரம்: உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்திலும் செயல்பட்டு வருகிறது. இக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் பல்லாவரம் கன்டோன்மென்ட், வெட்டேரன் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில் தாம்பரம் காவல் ஆணையரக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், சற்று நேரத்தில் அது வெடித்து விடும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
அதன்பேரில், விரைந்து சென்ற பல்லாவரம் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால், இது புரளி என்பது தெரிந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.