பாகிஸ்தானில் மீண்டும் பயங்கரம்; போலீஸ் வாகனம் மீது குண்டுவீச்சு: வீரர் ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்புடனான போர் நிறுத்தம் கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் முறிந்ததில் இருந்து, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. சமீபத்தில், செப்டம்பர் 30ம் தேதி தெற்கு வஜிரிஸ்தானில் நடந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 9 பேரும், அதே நாளில் பலுசிஸ்தானின் குவெட்டா நகரில் நடந்த சக்திவாய்ந்த கார் குண்டுவெடிப்பில் 10 பேரும் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில், நேற்று போலீசாரைக் குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெஷாவரின் பானா மாரா பகுதியில், சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு, போலீஸ் ரோந்து வாகனம் கடந்து சென்றபோது வெடிக்கச் செய்யப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில், போலீஸ் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மூன்று போலீசார் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.