34 வாகனங்களில் மனித குண்டு சுற்றிவருவதாக மிரட்டல்: மும்பைக்கு ரெட் அலர்ட்
மும்பை: 14 பயங்கரவாதிகள் மும்பைக்குள் நுழைந்திருப்பதாகவும் 34 வாகனங்களில் மனிதகுண்டுகள் நகரை சுற்றி வருவதாகவும் மிரட்டல் வந்ததை அடுத்து மும்பை போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதி நாளான இன்று சிலைகளை கரைக்கும் அனந்த் சதுர்த்தி விழா மும்பையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
ஆயிரக்கணக்கானோர் திரண்டு கணபதி சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். நகரம் முழுவதும் இன்று விழாக் கோலம் பூண்டிருக்கும் என்பதால் மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க நகரில் சுமார் 21 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மும்பை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ் அப் ஹெல்ப்லைன் எண்ணிற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் மும்பையில் 14 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். 34 வாகனங்களில் மனிதகுண்டுகள் சுமார் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளுடன் சுற்றி வருவதாகவும் அது வெடித்தால் நகரையே அதிரச் செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டது. ‘லஷ்கர்-இ-ஜிஹாதி’ என்ற அமைப்பின் பெயரில் இந்த மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டது.
இதையடுத்து உடனடியாக போலீசார் முக்கியமான அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தினர். நகரம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். போலீசார் முழு விழிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.