கடலூர் முதுநகர் அருகே சிப்காட்டில் சாய தொழிற்சாலை பாய்லர் வெடித்து 3 வீடுகள் இடிந்தன: மூச்சுத்திணறலில் 31 பேர் பாதிப்பு; மக்கள் மறியல்
நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். மேலும் பாய்லரில் இருந்து வெளியேறிய கழிவுநீர் ஊருக்குள் புகுந்ததால் 3 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் பதற்றம் நிலவியது. தகவலறிந்த கடலூர் முதுநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, தரையில் படிந்த துர்நாற்றத்துடன் கூடிய கழிவுநீரை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினர். இதனால், கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட 31 பேரை போலீசார் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த நிறுவனத்துக்கு எஸ்பி ஜெயக்குமார் நேரில் வந்து பார்வையிட்டு, ஆய்வு செய்தார். கழிவுநீர் மிகவும் சூடாக இருந்ததால் சிலருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் திடீரென கடலூர்- சிதம்பரம் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகை மற்றும் வாயுக்களால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். வெளியேறிய கழிவு நீரால் வீடுகள் சேதமடைந்துள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து அந்த நிறுவனத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதையடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.