ராட்சத அலையில் சிக்கிய மாணவன் உடல் கரை ஒதுங்கியது
வேளச்சேரி: கோட்டூர்புரத்தில் உள்ள கல்வி நிறுவனத்தில் எம்ஏ முதலாமாண்டு படித்து வந்த மாணவர்களான திண்டுக்கல்லை சேர்ந்த கவிபிரகாஷ் (21), கேரளாவை சேர்ந்த முகமது ஆதில் (21), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஹித் சந்திரன் (21) உள்பட 14 மாணவர்கள், கடந்த 2 நாட்களுக்கு முன், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு வந்தனர். அங்கு கவிபிரகாஷ், ரோஹித் சந்திரன், முகமது ஆதில் ஆகிய 3 பேர் மட்டும், ஆளுநர் ஓய்வு இல்லம் அருகே கடலுக்குள் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி 3 மாணவர்களும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்ததும் சக மாணவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் இறங்கி, அலையில் சிக்கிய கவிபிரகாஷ், முகமது ஆதில் ஆகிய இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதில், சம்பவ இடத்திலேயே கவிபிரகாஷ் இறந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த முகமது ஆதிலை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மாயமான ரோஹித் சந்திரனை, சாஸ்திரி நகர் போலீசார் தேடி வந்த நிலையில்,அவரது சடலம் நேற்று முன்தினம் மாலை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கியது. தகவலறிந்து வந்த பட்டினப்பாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.