சடலங்கள் புதைக்கப்பட்ட விவகாரம் தர்மஸ்தலாவில் 13வது இடத்திலும் எந்த தடயமும் சிக்கவில்லை
பெங்களூரு: தர்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 13வது இடத்தில் ஜேசிபி மூலம் ஆழுமாக தோண்டி சோதனை செய்யப்பட்டது. ஆனால் எந்த தடயமும் சிக்கவில்லை என்பதால் மீண்டும் அதை மண் நிரப்பி மூடினர். கர்நாடக மாநிலம் தென்கனரா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா கிராமத்தில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக வந்த புகாரையடுத்து கடந்த 14 தினங்களாக புகார் கூறிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. ஏற்கனவே ஆறாவது இடம் மற்றும் 14வது இடங்களில் சில மனித எலும்பு கூடுகள் கிடைத்திருந்தன.
அவை மணிப்பாலில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ரேடார் கருவி மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பிற்பகலில் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் 13வது பாயிண்ட் என்று குறிக்கப்பட்ட இடத்தில் சுமார் 6 அடி அகலம் 18 அடி ஆழம்வரை தோண்டி பார்க்கப்பட்டது. மாலை 7 மணி வரை தோண்டிவிட்டு தடயம் எதுவும் சிக்காததால் பின்னர் அதை மூடும் பணியில் ஜேசிபி மற்றும் தொழிலாளர் ஈடுபட்டனர். எந்த ஒரு எலும்பும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு தலைவர் பிரணாவ்மொகந்தி நேற்று பிற்பகல் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.