படகு இல்லம்-மேரிஸ்ஹில் சாலை சீரமைப்பு
ஊட்டி : ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 23வது வார்டில் படகு இல்லம் முதல் மேரிஸ்ஹில் வரையுள்ள சாலை சீரமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ஆங்காங்கே சாலை பழுதடைந்து காணப்பட்டன. இதனை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், இச்சாலைகளை சீரமைக்கும் பணிகளை தற்போது நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக 23வது வார்டிற்குட்பட்ட பகுதியில் படகு இல்லம் முதல் மேரிஸ்ஹில் வரை சுமார் 2 கி.மீ தூரம் சாலை சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
இச்சாலை சீரமைப்பு பணிகளை வார்டு கவுன்சிலர் மேரி புளோரினா ஆய்வு செய்தார். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இச்சாலை சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.