ப்ளூ டிரையாங்கிள் சிறப்பு நடவடிக்கையில் இணைய மோசடி, மனிதக்கடத்தல் முகவர்களை கைது செய்தது தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு
சென்னை: கடந்த சில ஆண்டுகளில் மியான்மர், கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைந்துள்ள இணைய மோசடி முகாம்களின்" (Cyber Scam Compounds) மூலமாக ஒருங்கிணைந்த சர்வதேச இணைய மோசடிகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. தூதரக நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்த முயற்சிகளின் மூலம் மியான்மர் இராணுவ அரசால், மியான்மர் மாநிலத்தின் மியாவடி பகுதியில் உள்ள கே கே பார்க் எனப்படும் ஓர் இணைய மோசடி முகாமில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின் போது முகாமில் வேலை செய்தவர்கள் பலர் சர்வதேச எல்லையைக் கடந்து தாய்லாந்துக்கு தப்பிச் சென்றனர். அவர்களில் 465 இந்தியர்கள் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 மற்றும் 10 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக இந்தியாவிற்கு மீட்டு கொண்டு வரப்பட்டனர். இவர்களில் 35 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் ப்ளூ டிரையாங்கிள் (BLUE TRIANGLE) எனப்படும் சிறப்பு நடவடிக்கையை இணைய வழி குற்றப்பிரிவின் காவல் கண்காணிப்பாளர் ஷாஹனாஸ் இலியாஸ் அவர்களில் தலைமையில் ஆரம்பித்தது.
புலன் விசாரணைக் குழு. தடயவியல் பரிசோதனைக் குழு போன்ற சிறப்பு குழுக்கள் டெல்லியிலும் மற்றும் சென்னையிலும் அமைக்கப்பட்டன. நுண்ணறிவு தகவல்கள் மற்றும் அறிவியல் சார்ந்த விசாரணையின் மூலம் டிஜிட்டல் ஆதாரங்களின் உதவியுடன் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு முக்கிய மனிதக்கடத்தல் முகவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த நபர்கள் மியான்மரில் அமைந்த கே கே பார்க் பகுதியில் மலேசிய முகவர்களுடன் இணைந்து 'DIY' என்ற மோசடி நிறுவனத்தை நிறுவுவதிலும், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களிலிருந்து இளைஞர்களை "டைபிங்" அல்லது 'ஐ.டி' வேலைவாய்ப்பு என்று ஏமாற்றி இந்த மோசடி முகாம்களுக்கு மனிதக்கடத்தல் செய்ததிலும் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஆவர். மீட்கப்பட்ட 31 பேரில் 18 நபர்களை இவர்கள் ஏமாற்றி அழைத்து சென்றது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாநில இணையவழி குற்ற விசாரணை மையத்தில் மனிதக் கடத்தல் மற்றும் கடத்தல் குற்றங்களுக்கான ஆயுள் தண்டனை வரை தண்டனை வழங்கக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த நான்கு முக்கிய முகவர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களின் சர்வதேச தொடர்புகள் மற்றும் சட்டவிரோத வருமான விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மீதமிருந்த மீட்கப்பட்டவர்கள், சட்டவிரோதமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எவ்வாறு மனிதக் கடத்தல் மற்றும் குற்ற செயல்களில் சிக்க வைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் ஆலோசிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர். மேலும், சுற்றுலா விசாவுடன் வெளிநாடுகளில் சைபர் மோசடி முகாம்களில் வேலை செய்வது சட்டவிரோதம் என்பதை எடுத்துரைத்து, மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் உணர்த்தப்பட்டது.
ப்ளூ டிரையாங்கிள்' ஆப்பரேஷனில் கண்டறியப்பட்ட “மோசடி செய்யும் முறை"
இத்தகைய இணையமோசடி முகாம்களில் வேலைசெய்வோர் பெரும்பாலும் சமூக வலைதளம் அல்லது உள்ளூர் முகவர்களின் தவறான வாக்குறுதிகளின் வழியாக ஏமாற்றப்படுகிறார்கள். இந்த முகவர்கள் கடத்தும் ஒவ்வொரு நபருக்கும் இவ்வளவு என்ற ஒப்பந்தக் கட்டணத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள். "தாய்லாந்தில் நல்ல சம்பளத்துடன் வேலையுள்ளது" என்று தவறாக சொல்லி சுற்றுலா விசாவுடன் பயணித்து சில மாதங்களில் பணி விசாவுக்கு மாறுதல் வழங்குவதாக அழைக்கப்படுறார்கள்
தாய்லாந்து வந்தவுடன், ஆயுதங்களுடன் கூடிய சீன அல்லது மலேசிய முகவர்கள் வழிகாட்டி, சாலைகள், காடுகள், நதிகள் வழியாக மியான்மர் கிளர்ச்சி குழுக்கள் கட்டுப்படுத்தும் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்குச் சென்றதும், வேலைவாய்ப்பு என்று சொன்னது ஒரு மோசடி முகாம் என்பதும், அங்குள்ள கடுமையான வேலையிட நிபந்தனை, உடல் வன்முறை, குறைந்த சம்பளம் போன்ற உண்மைகள் தெரியவருகின்றன.
இந்தியர்களை ஏமாற்றுவது என்பதை இலக்காகக் கொண்டு மோசடி செய்ய பயிற்சி கொடுக்கப்படுகின்றது. அவர்கள் கொடுத்த இலக்கை அடைய இயலாதபோது அபராதம் மற்றும் தண்டனை இரண்டுமே கொடுக்கப்படுகின்றன. இந்த மோசடி செய்யும் முகாம்களில் இருந்து தப்பிச் செல்ல பெரும்பாலும் வழியில்லை.
இணையவழி குற்றப்பிரிவின் கூடுதல் இயக்குனர் சந்தீப் மிட்டல் அவர்கள் இந்த சிறப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்த குழுக்களைப் பாராட்டினார். மேலும், வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளைத் தேடும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கீழ்க்காணும் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டார்
* பொது மக்களுக்கு அறிவுரை
தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு மனிதக் கடத்தல் மற்றும் சைபர் அடிமைத்தனம் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு மாநில ஒருங்கிணைப்பு அமைப்பாக உள்ளது. இத்தகைய உள்ளூர் முகவர்கள் குறித்து தகவல் இருப்பின் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு இரகசியமாக தகவல் அளிக்கலாம்: spccd1.dgp@tn.gov.in
சட்டப்படி வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருபவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களாக வெளிவிவகார அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் பட்டியலை www.emigrate.gov.in என்ற அரசின் இணையதளத்தில் காணலாம். ஒவ்வொரு பொய்யான வாக்குறுதியின் பின்னாலும் சுரண்டல் மற்றும் ஆபத்து மறைந்திருக்கிறது என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும். எச்சரிக்கையுடன் இருங்கள், விழிப்புணர்வுடன் செயல்படுங்கள், சந்தேகமான வேலை வாய்ப்பு அழைப்பு என்றால் உடனே புகாரளிக்கவும்.