மூணாறு பகுதியில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்கள்: போட்டோ, செல்பி எடுத்து பயணிகள் உற்சாகம்
மூணாறு: மூணாறு பகுதியில் நீலக்குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவைகளை போட்டோ, செல்பி எடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைகின்றனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி மலர்கள் பூக்கும். இந்த மலர்களில் 64 வகைகள் உள்ளன. இவைகள் கூட்டம் கூட்டமாக பூக்கும். இவற்றில் நீலக்குறிஞ்சி மலர் ஒரு வகையாகும். இவை வெளிர் ஊதா மற்றும் நீல நிறத்தில் காணப்படும். மழையில்லாத நிலையில் 3 மாதம் வரை குறிஞ்சி மலர்கள் பூக்கும். நீலக்குறிஞ்சி மலர்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவின் சோலை வனங்களில் கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 2,400 மீட்டர் உயரத்தில் பூக்கின்றன.
இதற்கு முன்பு கடந்த 2005ல் மூணாறு ராஜமலை பகுதியில் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துக் குலுங்கின. இவற்றை காண்பதற்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை தந்தனர். அதன்பின்னர் கடந்த 2018ல், நீலக்குறிஞ்சி வசந்தம் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது பெய்த பலத்த மழை காரணமாக நீலக்குறிஞ்சி மலர்கள் சரியாக பூக்கவில்லை. குறிஞ்சிப் பூ சீசன் முடிந்து 7 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தாண்டு மூணாறில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக மூணாறு அருகே உள்ள இக்கா நகர் கிரஹாம்ஸ் லேண்ட், மூணாறு பொறியியல் கல்லூரிச் சாலை, மாட்டுப்பட்டி அணை ஆகிய பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
தற்போது சில செடிகளில் மட்டுமே பூத்துள்ளன. வரும் நாட்களில் கூடுதல் செடிகளில் குறிஞ்சி மலர்கள் பூக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பூத்து குலுங்கும் நீல குறிஞ்சி மலர்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.