நீல நிறத்தில் முட்டையிட்ட அதிசய நாட்டு கோழி: ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஒரு நாட்டு கோழி, நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. இதனை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகா, நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சையத் நுார். கோழிகள் வளர்த்து வருகிறார். இவரிடம், 10 நாட்டு கோழிகள் உள்ளன. அதன் முட்டைகளை விற்பனை செய்கிறார். இந்நிலையில் முட்டைகளை எடுக்க, கோழிகள் கூடுக்கு சென்ற அவர் அதிர்ச்சியடைந்தார். நாட்டு கோழிகளில் ஒன்று, வெள்ளை நிறத்துக்கு பதிலாக, நீல நிறத்தில் முட்டையிட்டிருந்தது. உடனடியாக, கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
அவர்களும் விரைந்து வந்து பார்த்து விட்டு ஆச்சரியமடைந்தனர். முட்டை நீல நிறத்தில் இருப்பதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்கின்றனர். முட்டை மேற்புற ஓடு மட்டுமே நீல நிறத்தில் உள்ளது. உட்புறத்தில் வழக்கமான நிறத்தில் உள்ளது. நீல நிற முட்டையை காண, சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். நீல நிற முட்டையிட்ட கோழியை, ஆய்வுக்கு உட்படுத்த கால்நடை துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே கோழியிட்ட நீல நிற முட்டையை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சன்னகிரி கால்நடை பராமரித்துறை உதவி இயக்குனர் அசோகா கூறுகையில், “நீல நிறத்தில் கோழி முட்டை இருப்பதற்கு, மெடுசில் உள்ள பிலிவர்டின் எனப்படும் நிறமி காரணமாக இருக்கலாம். முட்டையின் மேல் பகுதி ஓடு மட்டுமே நீல நிறத்தில் இருக்கும். உள்பகுதியில் வெள்ளை, மஞ்சள் கரு இருக்கும். முதல்முறையாகதான் கோழி நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. தொடர்ந்து நீல நிற முட்டையிடும் பட்சத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்படும்” என்றார்.