ரத்த கொடை அதிகம் கிடைத்தால் விஷம் அருந்தியவர்களை ஊட்டியிலேயே காப்பாற்ற முடியும்
*மருத்துவக்கல்லூரி டீன் தகவல்
ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பு அமைப்புகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் பல்வேறு அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளுக்கு ரத்த தேவைகளை நிவர்த்தி செய்ய ரத்த தான முகாம்களை தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைத்து கொடுக்கின்றனர்.
இவர்களை கவுரவிக்கும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர்களை பாராட்டும் விழா நடைபெற்றது. இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் சரவணன் பேசியதாவது:
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் உயிரை காக்கும் வகையில் ரத்த தேவை அதிகரித்து வருகிறது. இவற்றை ஈடுகட்டும் வகையில் தன்னார்வலர்களிடம் ரத்தம் சேகரிக்கப்படுகிறது. ரத்தம் சேகரிக்க மிகவும் சிரமப்பட்டு அர்ப்பணிப்புடன் முகாம்களை ஒருங்கிணைத்து தரும் அமைப்புகளுக்கு பாராட்டுகள்.
தற்போது விஷம் அருந்தியவர்கள் உயிர் பிழைக்க உதவும் பிளாஸ்மா ஊட்டியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு ரத்த தேவை அதிகரித்து வருகிறது. ரத்தம் அதிகம் கிடைக்கும் சூழலில் அவர்கள் கோவை மருத்துவக்கல்லூரி அனுப்பாமல் ஊட்டியிலேயே சிகிச்சை அளித்து உயிர்காக்க முடியும்.
மேலும் இதர சிகிச்சைகள் மேற்கொள்ளவும் மாதம் சுமார் 150 யூனிட் வரை தேவைப்படுவதால் அனைத்து தன்னார்வ அமைப்புகளும் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும். இவ்வாறு பேசினார்.இந்நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கேத்தி, எப்பநாடு, சேவா பாரதி, குன்னூர் ராணுவ கல்லூரி, ஜெஎஸ்எஸ் கல்லூரி, நீலகிரி சேவா கேந்திரம், நாம் தமிழர் கட்சி குருதி பாசறை, இந்திய செஞ்சிலுவை சங்கம் உட்பட 20க்கும் மேற்பட்ட ரத்த தான ஒருங்கிணைப்பு அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி, ரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கூடலூர் அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் மகேஸ்வரன், சேவா பாரதி அமைப்பு நிர்வாகி மற்றும் செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் மோரிஸ், சாந்த குரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.