இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை கொண்ட அம்பேத்கர் பற்றிய நூல்: அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்
சென்னை: இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை கொண்ட அம்பேத்கர் பற்றிய நூலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார். அம்பேத்கரின் அனைத்து படைப்புகளும் இன்றைய தமிழ் இளைஞர்கள் எளிமையாக வாசிக்கும் வகையில் புலவர் செந்தலை ந.கவுதமன், பேராசிரியர் வீ.அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் மு.வளர்மதி, கல்லூரி கல்வி இயக்ககத்தின் முன்னாள் துணை இயக்குநர் அ.மதிவாணன் ஆகியோரின் நெறியாளுகையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பிறமொழி கலப்பினை அகற்றி மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சி துறை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து மக்கள் பதிப்பாக அணியம் செய்யப்பட்ட முதல் 10 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் 13.1.2025 அன்று வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தற்போது இரண்டாம் கட்டமாக மொழிபெயர்க்கப்பட்டு அணியம் செய்யப்பட்டுள்ள தீண்டாமை - 2 தொகுதிகள்; காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன - 4 தொகுதிகள்; இந்து மதம், மார்க்சியம், மத மாற்றம் - 4 தொகுதிகள்;
புத்தர் - அவரது தம்மம் - 3 தொகுதிகள்; பாகிஸ்தான் அல்லது இந்திய பிரிவினை - 4 தொகுதிகள் என மொத்தம் 17 தொகுதிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துறை செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள், வீ.அரசு, அ.மதிவாணன் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த சோ.சண்முகநாதன், சிவக்குமார், மா. சிவக்குமார் பங்கேற்றனர்.