திண்டுக்கல்லில் எடப்பாடிக்கு எதிராக கருப்புக்கொடி, முற்றுகை
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சின்னாளபட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தேர்தல் பிரசாரம் செய்தார். சின்னாளபட்டியில் பிரசாரம் செய்ய வருவதற்கு முன்னதாக திண்டுக்கல் அருகே தோமையார்புரம் பகுதியில் வந்த போது எடப்பாடி பழனிசாமி வந்த வாகனத்தை அதிமுக உண்மை தொண்டர்கள் என்ற பெயரிலான குழுவினர் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என கோஷமிட்டபடி முற்றுகையிட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய பின் வாகனம் அங்கிருந்து சென்றது.
பின்னர் பிரசாரத்தை முடித்து விட்டு சென்ற போது சின்னாளபட்டி பஸ் நிலையம் அருகே தேவர் சிலை பகுதியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் 30க்கும் மேற்பட்டோர் முக்குலத்தோருக்கு எதிராக 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் வஞ்சகம் செய்ததாகவும், தொடர்ந்து முக்குலத்தோருக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்பு கொடி காட்டினர். மேலும் எடப்பாடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவரது வாகனத்தை முற்றுகையிட முயன்றனர்.
இபிஎஸ் படம் இல்லாமல் அதிமுக போஸ்டர்
நெல்லை அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ‘புரட்சித்தலைவி அம்மாவின் நூற்றாண்டு கால வெற்றி கனவை தொண்டர்கள் நிறைவேற்றுவோம்’ மற்றும் ‘தொண்டர்களின் ஆட்சி அமைய ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம்’ என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறவில்லை. மாறாக, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.