கம்மாபுரம் அருகே சு.கீணனூர் கிராமத்தில் குடிநீர் குழாயில் கருப்பு நிறத்தில் வந்த தண்ணீர்
மங்கலம்பேட்டை : கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ள சு.கீணனூர் கிராமம், அம்பேத்கர் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. நேற்று மதியம் மும்முனை மின்சாரம் வந்த பின்பு அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டுள்ளது. அவ்வாறு தண்ணீர் ஏற்றப்பட்ட பின்பு சிறிது நேரத்தில் பொதுமக்களின் தேவைக்காக குடிநீர் திறக்கப்பட்டது.
இதில் தண்ணீர் பிடிப்பதற்காக, அப்பகுதி மக்கள் குழாய்களைத் திறந்தபோது, கருப்பு நிறத்தில் குடிநீர் வெளியே வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பொதுமக்கள் கத்தி கூச்சலிடவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. இதனால் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வெளியேறிய கருப்பு நிற குடிநீரை பொதுமக்கள் யாரும் குடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கம்மாபுரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தவுடன், விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சுத்தம் செய்வதற்காகவும், பிளீச்சிங் பவுடர் அனுப்புவதற்காகவும், பயன்படுத்தப்படும் பைப்லைனில் மர்ம நபர்கள், கருப்பு நிற திரவ பொருளை கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அவ்வாறு கருப்பு நிற பொருள் கலக்கப்பட்டதால், நீரேற்றும்போது மேலேறி, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிக்குள் சென்று, தொட்டி முழுவதுமாக கருப்பு நிறமாக மாறி குழாய் வழியாக வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கம்மாபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நீர்த்தேக்க தொட்டியில் மர்ம பொருளை கலந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், கலக்கப்பட்ட மர்ம பொருள் என்ன பொருள், எந்த வகையான பொருள் என்று எதுவும் தெரியாத நிலையில், குடிநீரை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் எனவும்,அதுவரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்படுத்தக் கூடாது, குடிநீர் செல்லக்கூடிய குழாய்கள் மற்றும் தொட்டிகளை சுத்தம் செய்தால் மட்டுமே குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.