சட்டமன்ற தொகுதி வாரியாக வரும் 5ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம்: பாஜக மாநில செயலாளர் அறிவிப்பு
சென்னை: சட்டமன்ற தொகுதி வாரியாக வரும் 5ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் அறிவித்துள்ளார். தமிழக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, 3.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும், புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதியில் கூறினர்.
அதேபோல, மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடும் முறை கொண்டுவரப்படும் என்றும், சிலிண்டருக்கு தமிழக அரசு சார்பாக ரூ.100 மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். மாறாக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு நடவடிக்கைகளை அரசு செய்து வருகின்றது. தொகுதி அளவில் ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய பிரதான பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி சட்டமன்ற வாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளது. வருகிற அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 30ம் தேதி வரையிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.