உறவாடி கெடுப்பது பாஜகவின் மாடல்: செல்வப்பெருந்தகை காட்டம்
மதுரை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தியாகி இமானுவேல் சேகரனுக்கு புகழஞ்சலி செலுத்துவதில் காங்கிரஸ் பேரியக்கம் பெருமை அடைகிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்பதில் நாட்டுக்கு என்ன பெருமை இருக்கிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததை போல், துணை ஜனாதிபதி தேர்தலிலும் வாக்கு திருட்டு நடந்திருக்கிறதா என தெரியவில்லை.
இதை பிரதமர்தான் சொல்ல வேண்டும். அதிமுகவை உடைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு, ‘அவர் உலக அதிசயமான வார்த்தையை பேசி இருக்கிறார். மகாராஷ்டிராவில் சிவசேனாவை இரண்டாக உடைத்து ஷிண்டே சிவசேனாவை உருவாக்கியது பாஜக. அதன்பின் ஷிண்டே சிவசேனாவை ஓரங்கட்டி பாஜகவை சேர்ந்தவர் முதல்வராக்கப்பட்டுள்ளார்.
உறவாடி கெடுப்பது பாஜகவின் மாடல். ஆமை புகுவதைப் போல பாஜக புகும் மாநிலம் சிதைந்து போகும். மக்கள் அதிகாரம், திட்டத்தில் கை வைத்து, மக்களுக்கு சேர வேண்டிய அனைத்தையும் அம்பானி, அதானியிடம் பாஜவினர் கொடுத்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.