திமுக அரசின் திட்டங்களை பார்த்து பொறுக்க முடியாமல்தான் பாஜக அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது: உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: திமுக அரசின் திட்டங்களை பார்த்து பொறுக்க முடியாமல்தான் ஒன்றிய பாஜக அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட விருகம்பாக்கம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பகுதி, ஒன்றியம், வட்டம், கிளை மற்றும் பாகங்களில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திமுக இளைஞர் அணி அமைப்பாளர்,துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது. இதில் திமுக இளைஞர் அணிச்செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசியதாவது: திமுக தொடங்கப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அதைக் கொண்டாடுகின்ற வகையில் மிகப்பெரிய கருத்தரங்கத்தை, தலைவரிடம் அனுமதி வாங்கி, விரைவில், நடத்த இருக்கிறோம். மக்களை தினசரி சந்தித்துப் பேசுங்கள். அவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய குறையே, அவர்களிடம் யாரும் வந்து, `என்ன குறை’ என்று கேட்காதது தான். நிச்சயம், மக்களோடு நீங்கள் தொடர்பில் இருந்தீர்கள் என்றால், அவர்களின் அன்பையும், ஆதரவையும் நீங்கள் பெற்று விடலாம். நம் திட்டங்களைப் பார்த்து இன்றைக்கு வட இந்தியாவே பாராட்டிக்கொண்டு இருக்கிறது.
ஆனால், இதைப் பொறுக்க முடியாமல்தான் ஒன்றிய பாஜக அரசு, நம் அரசிற்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் எதிர்த்து, குரல் கொடுக்கிற ஒரே தலைவர், இந்தியாவிலேயே நம் ஒரே தலைவர் தான். அதுமட்டுமில்லை, `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற ஒரு சிறப்பான முன்னெடுப்பை நம்முடைய தலைவர் அறிவித்தார். இன்றைக்கு `ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பின் மூலமாக 2 கோடி உறுப்பினர்களை திமுகவில் நாம் இணைத்து இருக்கிறோம். இந்த `ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கைப் பணியில் இளைஞர் அணியினர் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்று பல மாவட்டச் செயலாளர்கள் என்னிடம் பெருமையாகச் சொல்லி இருக்கிறார்கள். அதில் நீங்கள் இன்னும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். இதைப் பார்த்துத்தான், அதிமுகவுக்கு பயம் வந்துவிட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைக்கு எங்குச் சென்று பேசினாலும், நம்முடைய தலைவர் பற்றியும், ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தைப் பற்றியும்தான் அவர் பேசுகிறார்.
அதிமுக-பா.ஜ.க கூட்டணி திரும்பவும் வந்தால், தமிழ்நாட்டுக்குள் மீண்டும் என்னென்ன வரும் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். தமிழ்நாட்டிற்குள் இந்தித் திணிப்பு வரும், தமிழ்நாட்டிற்கு தொகுதி மறுவரையறை வந்துவிடும். புதியக் கல்விக்கொள்கை வந்துவிடும். ஆகவே, பாஜக, அதிமுகவை வீழ்த்துவதற்கான போரில், நம் இளைஞர் அணி முன்வரிசையில் நிற்க வேண்டும். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், திமுக அணி 200-க்கு அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும் என்று தலைவர் நமக்கு இலக்கு கொடுத்திருக்கிறார். 2026- சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், நம் தலைவர் தொடர்ந்து 2-வது முறையாக முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் அத்தனைபேரும் களத்தில் இறங்கி, மக்களைச் சந்தித்து தேர்தல் பணியை இன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா, காரப்பாக்கம் கணபதி, பகுதிக் கழகச் செயலாளர் நொளம்பூர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.