தேசிய தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் பாஜக பெண் எம்பிக்கு மீண்டும் அவமதிப்பு: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு
ஜபல்பூர்: பாஜக தேசிய தலைவர் பங்கேற்ற கூட்டத்தில், கட்சியின் ராஜ்யசபா பெண் எம்.பி ஒருவரே பாதுகாப்பு அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மாநில முதல்வர் மோகன் யாதவ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை ககூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்பி சுமித்ரா பால்மிக்கை, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதத்தின்போது, காவலர்கள் அவரைத் தள்ளிவிட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த தலைவர்கள் தலையிட்டு சமாதானம் செய்த பின்னரே, எம்பி கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்.
எப்போதும் எளிமையாக இருக்கும் சுமித்ரா, எந்தவித பாதுகாப்பு மற்றும் ஆரவாரம் இன்றி கூட்டத்திற்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர், கூட்டத்தில் அதிருப்தியுடன் காணப்பட்டார். இதுபோன்ற அவமதிப்பை தனது கட்சியினரால் எம்பி சுமித்ரா பால்மிக் எதிர்கொண்டுள்ளார். கடந்த 2022 ஜூலையில், சாகர் சர்க்யூட் ஹவுஸில் அவருக்குத் தெரிவிக்காமல் அவரது உடைமைகள் அகற்றப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், 2023 ஜூனில், உலக யோகா தின நிகழ்ச்சியில், அவருக்கான நாற்காலி மேடைக்குப் பின்னால் போடப்பட்டிருந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் சவுரப் சுமன் தான் இந்த அவமதிப்பிற்கு காரணம் என்று அவர் வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது முறையாக சுமித்ரா பால்மிக் அவமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.