பாஜ நடத்தி வரும் மலிவான அரசியலுக்கு துணை போகிறவர்களை புறக்கணிக்க வேண்டும்: வக்பு சட்டத்தில் அதிமுக கபட நாடகம், இஸ்லாமியர்களுக்காக நிற்கும் ஒரே இயக்கம் திமுக தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: பாஜ நடத்தி வரும் மலிவான அரசியலுக்கு துணை போகிறவர்களை புறக்கணிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நபிகள் நாயகம் அவர்களின் 1500வது பிறந்தநாள் விழாவில் அவர் பேசியதாவது: பழமைவாத அடக்குமுறைகளை எதிர்த்து, ஏழைகள் மீது கருணை பொழிந்து, பணக்காரர்களிடம் இருக்கும் பணம்; மற்றவர்களுக்கும் தர வேண்டியது, உனது நடத்தை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் நபிகளார்.
நபிகளாரின் 1500வது பிறந்தநாளில் காசாவில் நடத்தப்பட்டுவரும் துயரத்தைப் பார்த்து மனசாட்சி உள்ள யாரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. இதற்கு விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். உடனடியாக பாலஸ்தீன மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளும் முடிவிற்கு வர வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் வலியுறுத்துகிறேன்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, உண்மையான தோழமை உணர்வோடு போராடியது தி.மு.க.தான். அந்தச் சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டார்களா என்று கேள்வி எழுப்பியதும் அந்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதும் யார் என்று, உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதேபோல், முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தபோது அ.தி.மு.க. எப்படி இரட்டை வேடம் போட்டது என்று எல்லோருக்கும் தெரியும். அதனால்தான், அன்வர் ராஜா போன்றவர்கள், துரோகத்தின் கூடாரமாக இருக்கும் கட்சிகளை புறக்கணித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கிறார்கள்.
அதேபோல், வக்பு சட்டத் திருத்தத்திலும் அ.தி.மு.க. நடத்திய கபட நாடகத்தை எல்லோரும் பார்த்தார்கள். ஆனால், தி.மு.க. உள்ளிட்ட இயக்கங்கள் நடத்திய சட்டப் போராட்டத்தால்தான் இன்றைக்கு, ஒன்றிய பா.ஜ. அரசு கொண்டு வந்த முக்கியத் திருத்தங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறோம். பா.ஜ. செய்து வரும் மலிவான சர்வாதிகார - எதேச்சாதிகார அரசியலுக்கு துணை போகக்கூடிய துரோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை புறக்கணிக்க வேண்டும்.
நபிகள் நாயகத்தின் 1500வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த விழா மேடையில் நின்று நான் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு உறுதியை தருகிறேன். இஸ்லாமிய மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் - பெற்றுத்தரும் இயக்கமாக திமுக என்றைக்கும் உங்கள் கூடவே உங்களில் ஒருவராக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, எஸ்.எம்.நாசர், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எம்.பி.நவாஸ்கனி,
ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, சமுதாய ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ ஹனிஃபா, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சார்,எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், அரசு தலைமை ஹாஜி முகம்மது அக்பர், தமிழ்நாடு ஜமா அத்துல் உலாமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி,
விழாக்குழு உறுப்பினர் முகமது காசிம் அனீஸ், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, சட்டமன்ற உறுப்பினர்கள், செஞ்சி மஸ்தான், முகமது ஷாநவாஸ், அப்துல் வஹாப், அப்துல் சமது, அசன் மவுலானா, இஸ்லாமிய இயக்க தலைவர்கள், உலமாக்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
* ‘உலகெங்கும் அன்பு பரவிட வேண்டும்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: நபிகள் நாயகத்தின் 1500வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று உலகெங்கும் அன்பு பரவிட வேண்டும், அமைதி நிறைந்திட வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தினேன். சிறுபான்மை மக்களுக்கு இடர் வருபோதெல்லாம் பாதுகாப்பு அரணாக என்றும் திராவிட முன்னேற்ற கழகம் துணை நிற்கும் என கூறியுள்ளார்.