பாஜகவை கண்டு அஞ்சுகிறார் பழனிசாமி; 2026ல் திமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
தருமபுரி: 2026ல் திமுக ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரகதீஸ்வரன் - மது பிரதிக்ஷா ஆகியோரின் திருமணத்தை நடத்திவைத்து வாழ்த்தினார். பின்னர் பேசிய முதல்வர்; சென்னையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. எஸ்.ஐ.ஆர். தொடர்பாக முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். சீராய்வு என்ற பெயரில் ஒரு தீய செயலை, சதி செயலை தேர்தல் ஆணையம் திட்டம் தீட்டி உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் உரிய அவகாசம் கொடுத்து எஸ்ஐஆர் நடத்த வலியுறுத்தினர்.
பீகாரில் செய்ததை மற்ற மாநிலங்களிலும் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த நாட்களே அவகாசம் கொடுத்து திருத்தம் செய்வது, வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம். நான் உறுதியாக சொல்கிறேன். பாஜக எப்படிப்பட்ட சதிச் செயல்களை செய்தாலும் அவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது. பீகாரில் எஸ்ஐஆர் அறிவித்தபோது முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது திமுகதான். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேஜஸ்வி இணைந்து பீகாரில் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பங்கேற்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இதில் கூட இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாஜகவுக்கு பயந்து தேர்தல் ஆணையத்தை எதிர்க்கக் கூட எடப்பாடி அஞ்சுகிறார். எஸ்ஐஆரை முறைகேடு நடக்காமல் கண்காணிக்க அதிமுகவினருக்கு எடப்பாடி அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் எஸ்ஐஆரில் முறைகேடு நடக்கும் என அறிந்திருந்தும் அவரால் வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள பீகார் மக்கள் பேசியிருப்பது பெருமை அளிக்கிறது. பீகார் மாநில பிரச்சாரத்தில் வாக்கு அரசியலுக்காக திமுக மீது பழி சுமத்தி நாடகமாடியுள்ளார் மோடி.
பீகாரில் பேசிய கருத்தை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு பற்றி இந்த மண்ணில் வாழக்கூடிய எல்லாருக்கும் தெரியும். 2026 தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்துள்ளதே என்பதே தலைப்புச் செய்தியாக இருக்கும். 2026 தேர்தல் தமிழ்நாட்டை அதிமுக, பாஜகவிடம் இருந்து காக்கும் தேர்தலாக அமையும் என்று கூறினார்.