இன்னிக்கு ரூ.50 ரூபாய் தான் வருமானம்... இங்கிலாந்து ராணி போல என்னை நடத்தாதீர்கள்: கண்ணீர் விட்டு கதறிய பாஜக எம்பி கங்கனா
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால், பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், தனது சொந்தத் தொகுதியான மண்டிக்குட்பட்ட மணாலி பகுதிக்கு, பாஜக எம்.பி.யும், பிரபல நடிகையுமான கங்கனா ரனாவத் நேற்று நேரில் சென்று பாதிப்புகளைப் பார்வையிட்டார். வெள்ளம் ஏற்பட்டு பல வாரங்கள் கழித்து அவர் தொகுதிக்கு வந்ததாகக் கூறி, உள்ளூர் மக்கள் அவருக்கு எதிராக ‘திரும்பிப் போ’ என முழக்கமிட்டனர். இதனால் அதிருப்தியடைந்த கங்கனா, மக்களிடம் கண்ணீருடன் பேசுகையில், ‘எனது உணவகமும் இங்குதான் இருக்கிறது. நேற்று அதன் மொத்த வருமானமே வெறும் 50 ரூபாய்தான்.
ஆனால், நான் அங்குள்ளவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும். என் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள். நானும் உங்களில் ஒருத்திதான், என்னை இங்கிலாந்து ராணி போல நடத்தாதீர்கள்’ என்றார். மணாலியில் இந்த ஆண்டு துவக்கத்தில் ‘தி மவுன்டைன் ஸ்டோரி’ என்ற பெயரில் அவர் உணவகம் ஒன்றைத் திறந்தார். வெள்ளத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால், அவரது தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற இடத்தில், தனது சொந்த நஷ்டம் குறித்து அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பெரும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.