சட்டீஸ்கர் அரசு விடுதி ஊழியர் மீது பாஜ அமைச்சர் தாக்குதல்
ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்ட தலைமையகமான ஜக்தல்பூரில் உள்ள சர்க்யூட் ஹவுசில் விருந்தினர் மாளிகை உள்ளது. இந்த விருந்தினர் மாளிகையில் கிதேந்திர பாண்டே(36) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாஜ அமைச்சர் கேதர் காஷ்யப் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்ததாக சமையலாளர் கிதேந்திர பாண்டே கோட்வாலி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கிதேந்திர பாண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நான் கடந்த 20 வருடங்களாக இங்கு வேலை செய்கிறேன். நேற்று முன்தினம் இரவு அமைச்சர் காஷ்யப்புக்கு சிற்றுண்டி சமைத்து கொண்டிருந்தபோது, அவரது அமைச்சர் கூப்பிடுவதாக கூறி அவரது பாதுகாப்பு அதிகாரி என்னை அழைத்து சென்றார்.
நான் சென்றபோது விருந்தினர் அறைகளை ஏன் திறக்கவில்லை? என கேட்டு அமைச்சர் கேதர் காஷ்யப் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். தொடர்ந்து என் காலரை பிடித்து இழுத்து என்னை அடித்தார். அப்போது அமைச்சரின் உதவியாளர் என்னை அங்கிருந்து மீட்டு அழைத்து சென்றார்” என குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள காஷ்யப் தன் எக்ஸ் பதிவில், “எங்கள் ஊழியர்கள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள். அவர்களின் அவமானம் சகிக்க முடியாதது” என்று தெரிவித்துள்ளார். சமையல் பணியாளரை தாக்கிய அமைச்சர் காஷ்யப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.