பாஜக நடிகை கங்கனா மீண்டும் சர்ச்சை பேச்சு; ஷாருக்கானை விட எனது பாதை கடினமானது
புதுடெல்லி: நடிகர் ஷாருக்கானின் வெற்றிப் பயணத்தை விட தனது வெற்றிப் பயணம் மிகவும் கடினமானது என நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், தனது வெற்றிப் பயணம் நடிகர் ஷாருக்கானை விட மிகவும் கடினமானது என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘அவர் (ஷாருக்கான்) டெல்லியைச் சேர்ந்தவர்கள்; கான்வென்ட்டில் படித்தவர்கள்.
ஆனால் நானோ, யாரும் கேள்விப்பட்டிராத பாம்லா என்ற சிறிய கிராமத்தில் இருந்து வந்தேன். நான் மற்றவர்களிடம் மட்டுமல்ல, எனக்கு நானே உண்மையாக இருந்ததும், எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசியதும்தான் என் வெற்றிக்குக் காரணம்’ என்று குறிப்பிட்டார். ஷாருக்கானுடன் தன்னை ஒப்பிட்டு கங்கனா பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த 2023ம் ஆண்டு, ‘நானும் ஷாருக்கானும்தான் சினிமா நட்சத்திரங்களின் கடைசி தலைமுறை’ என்றும், தொடர் தோல்விகளுக்குப் பிறகு இருவரும் மீண்டு வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது கங்கனாவின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. சில பயனர்கள், ‘நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஷாருக்கானை விட, கிராமப்புற பின்னணியைக் கொண்ட கங்கனாவின் பயணம் மிகவும் சவாலானது’ என்று அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
மற்றவர்களோ, ‘இது ஒரு மலிவான விளம்பர யுக்தி. இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தது உள்ளிட்ட ஷாருக்கான் சந்தித்த சவால்களை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல’ என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டெல்லியில் வளர்ந்த ஷாருக்கான், தொலைக்காட்சி தொடர்களில் தனது பயணத்தைத் தொடங்கி, 1991ல் மும்பைக்கு குடிபெயர்ந்து பாலிவுட் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்தார். அதே இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரை விட்டு தனது 15வது வயதில் வெளியேறிய கங்கனா, 19 வயதில் ‘கேங்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, இதுவரை நான்கு தேசிய விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.