சமூக ஊடகங்களில் வரும் மிரட்டலை காரணம் காட்டி பாதுகாப்பு கோரிய பாஜ நிர்வாகி மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை: சமூக ஊடகங்களில், மிரட்டல் விடுத்து பதிவுகள் வெளியிடப்பட்டதற்காக பாதுகாப்பு கோருவதை உரிமையாக கருத முடியாது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், பாதுகாப்பு வழங்கக் கோரிய தமிழக பா.ஜ. ஓ.பி.சி. பிரிவு துணைத் தலைவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பெரியசாமி, நவீன், தினகரன் ஆகிய ரவுடிகள், 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளதால், பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி பிரிவு துணைத் தலைவராக பதவி வகிக்கும் துரை சண்முக மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, இது சம்பந்தமாக நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்ததாக மனுதாரர் கூறும் மூன்று பேரும், அவரது நண்பர்கள். ஆந்திர மாநிலத்தில் நடத்தி வரும் குவாரி தொழில் பரிவர்த்தனையாக மூன்று பேருக்கும் மனுதாரர் 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பணத்தை கொடுக்காமல் தப்பிப்பதற்காகவும், அரசியல் லாபம் தேடும் நோக்கில் பாதுகாப்பு கோரியுள்ளார் என்று வாதிட்டார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, பாதுகாப்பு ஆய்வுக் குழு, மனுதாரருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறியுள்ளது. அவர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவர் தனக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறி காவல்துறை பாதுகாப்பு கோர முடியாது என்று ஏற்கனவே இந்த நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது. எனவே, சமூக ஊடகங்களில் மிரட்டல் விடுத்து பதிவு வெளியிட்டுள்ளதற்காக பாதுகாப்பு வழங்கும்படி உரிமையாக கோர முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவர் தனக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறி காவல்துறை பாதுகாப்பு கோர முடியாது