பாஜ மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனை
சென்னை: பாஜ மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக பாஜ மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள் கூட்டம் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.
பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கடந்த முறை பாஜ கூட்டணியில் இருந்த ஓபிஎஸ், டிடிவி.தினகரன் போன்றோரை கூட்டணியில் இணைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என டிடிவி.தினகரன் கூறியது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் 12ம் தேதி முதல் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்ய உள்ளார். மதுரையில் பிரசாரத்தை தொடங்குகிறார். பிரசாரத்தில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். தொடக்க விழாவில் கூட்டணி தலைவர்களை பங்கேற்க வைப்பது தொடர்பாகவும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.