4 அணிகளாக உடைந்ததற்கு பாஜதான் காரணம்; அதிமுக ஒன்றிணைந்தால் எடப்பாடி தலைமைக்கு ஆபத்து: செல்வப்பெருந்தகை பேட்டி
நெல்லை: அதிமுக ஒன்றிணைந்தால் எடப்பாடி தலைமைக்கு ஆபத்து வந்து விடும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார். பாஜ வாக்கு திருட்டை எதிர்த்து நெல்லையில் இன்று காங்கிரஸ் மாநில மாநாடு பிரமாண்டமாக நடக்கிறது. இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நெல்லையில் முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார். நேற்று மாநாட்டு திடலை ஆய்வு செய்த அவர், பின்னர் அளித்த பேட்டி: பீகாரில் வாக்கு திருட்டு சம்பவம் நடக்க உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம், எந்தத்தரவும் இல்லை என்றும், சிசிடிவி புட்டேஜ் உள்ளிட்ட ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் பாஜவுக்கு ஆதரவாக கருத்துகளை பேசி வருகிறது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற வாக்கு திருட்டு நடக்கக்கூடாது என்பதற்காகத் தான் இந்த விழிப்புணர்வு மாநாடு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் திமுகவின் குரலாக இருக்கிறது என்று பாஜ கூறுவது தவறு.
சொத்து வரி, மின்கட்டண உயர்வு, மோட்டார் வாகன சட்டத்திருத்தம், தூய்மைப்பணியாளர்களுக்கான கோரிக்கை, ஆணவப்படுகொலை உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் பாஜ, கூட்டணி கட்சிகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறது. இதற்கு மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களை உதாரணமாக சொல்லலாம். இந்தியா கூட்டணியை சிதைக்க வேண்டும் என்று பாஜ நினைக்கிறது. அது ஒரு காலமும் நடக்காது. தமிழ்நாட்டில் பாஜ- அதிமுக கூட்டணியை மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள். ஏற்கனவே 4 தேர்தல்களில் இந்தக் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. எனவே வருகிற தேர்தலிலும் அதிமுக கூட்டணி தோல்வியடையும். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறுவது சரியாக இருக்காது. ஏற்கனவே அதிமுக 4 அணிகளாக உள்ளது. இதற்கு காரணமே பாஜதான்.
அவர்கள் ஒன்றிணைந்தால் எடப்பாடியின் தலைமைக்கு ஆபத்து வரும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கிராம அளவில் பலப்படுத்தப்பட்டு வருகிறது. 2 லட்சம் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் கிராம கமிட்டி மாநாடு நடக்கிறது. இதில் ராகுல் கலந்து கொள்வார். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அண்ணாமலை வாய் சவடால் விடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.