பாஜகவை தடுக்கும் ஆற்றல் திமுகவிடம் மட்டுமே உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: அனுபவம், கொள்கை வலிமையுடன் பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவிடம் மட்டுமே உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றை பட்டியலிட்டு அவற்றுக்கு விளக்கமளித்து தமது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விடியோ பதிவிட்டுள்ளார். அதில்; அதிமுக - பாஜக கூட்டணிக்கு உள்ளேயே பல குழப்பங்கள் உள்ளன. கல்வி நிதி மறுப்பு, இந்தி திணிப்பு, கீழடி அறிக்கை போன்றவற்றை மக்களிடம் எடுத்துக்கூறுவதால் திமுகவை பாஜக குறிவைக்கிறது. பாஜகவை எதிர்க்கும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், காலை உணவு, புதுமைப் பெண் உள்பட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, மக்களை தேடி மருத்துவம் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். அனுபவம், கொள்கை வலிமையுடன் பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவிடம் மட்டுமே உள்ளது. திமுக ஆட்சி நீடித்தால்தான் தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக உள்ளார்கள். ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை முன்னெடுப்பில் ஒரு கோடிக்கும் மேல் குடும்பங்கள் இணைந்துள்ளன.
திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை தமிழ்நாட்டு மக்கள் பாராட்டி வருகின்றனர். உலக அளவில் போட்டியிடும் அளவுக்கு திமுக 2.0விலும் திட்டங்கள் தொடரும். நம் பயணம் நீண்டது! தமிழ்நாட்டை தலைகுனியவிடாமல் இலக்கை நோக்கி விரைவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.