பீகாரில் பாஜ-காங்கிரஸ் தொண்டர்கள் கடும் மோதல்
பாட்னா: பீகாரில் பாஜ-காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி கொடிகளால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் சட்டமன்ற தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பீகார் மாநிலத்தில் வாக்குகள் திருட்டு மற்றும் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெறுவதாக கூறி, ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பேரணியை தொடங்கியுள்ளார். இந்த பேரணியில், பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் மீது சிலர் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக பாஜ சார்பில் போலீசில் அளித்த புகாரின் பேரில் பிரதமர் மோடியை திட்டியவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக மாநில முதல் நிதிஷ்குமார் கூறுகையில், ‘தர்பங்காவில் நடந்த வாக்காளர் உரிமை யாத்திரையின் போது காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தளங்களில் இருந்து பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாருக்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துவது மிகவும் பொருத்தமற்றது. அதை நான் கண்டிக்கிறேன்’ என்றார். இருப்பினும், காங்கிரஸ் தலைவர் பவன் கேரா இந்த சம்பவத்தை மறுத்தார். முக்கியமான விஷயங்களில் இருந்து திசைதிருப்ப பாஜ தேவையற்ற பிரச்னைகளை எழுப்புகிறது என்றார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகளை கண்டித்து பாஜவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தின் முன்பு பாஜவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் தொண்டர்களும் அந்த இடத்தில் குவிந்தனர்.
திடீரென பாஜ-காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தங்கள் கட்சி கொடிகளால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.