பாஜகவில் சேரும் போஜ்புரி நடிகை? ஒன்றிய அமைச்சருடனான சந்திப்பால் பரபரப்பு!
பாட்னா: பிரபல போஜ்புரி நடிகை அக்சரா சிங், ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக ஊகங்கள் எழுந்துள்ளன. பிரபல போஜ்புரி நடிகையும், பாடகியுமான அக்சரா சிங், போஜ்புரி சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2010ம் ஆண்டு ‘சத்யமேவ் ஜெயதே’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், 2023ம் ஆண்டில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ‘ஜன சுராஜ்’ பிரச்சார நிகழ்வில் கலந்துகொண்டார்.
ஆனால், அப்போது தான் ஒரு கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டதாகவும், கட்சியில் சேரவில்லை என்றும் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்சரா சிங் அரசியலில் நுழையப் போவதாக மீண்டும் செய்திகள் பரவி வருகின்றன. ஒன்றிய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங்கை, அக்சரா சிங் சமீபத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.
அந்தப் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், அதனை ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதாகப் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், அக்சரா சிங் உடனடியாக இந்தச் செய்திகளை மறுத்துள்ளார். ‘...இந்த சந்திப்புக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. பாஜக தலைவர்களான மனோஜ் திவாரி, ரவி கிஷன் ஆகியோருடன் எங்கள் குடும்பத்திற்கு நீண்டகால நட்பு உள்ளது’ என்று அவர் கூறியுள்ளார். தற்போது தனது முழு கவனமும் சினிமா வாழ்க்கையில்தான் உள்ளது என்றும், தனக்கு எந்த அரசியல் சார்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.