பாஜ கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ்?.. எதுவும் நடக்கலாம் என்கிறார் நயினார்
தேனி: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். தேனிக்கு நேற்று வந்த நயினார் நாகேந்திரன், பங்களாமேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘‘கரூருக்கு நடிகர் விஜய் போனார். பகல் 12 மணிக்கு வர வேண்டியவர் இரவு 7 மணிக்கு சென்றார். அங்கு கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தனர். மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு கூடியது. அங்கு 5 லட்சம் பேர் கூடினர். மாநாடு முடிந்ததும் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை அடுக்கி வைத்து சென்றனர். நான் ஒன்றும் பிரபல சினிமா நடிகர் இல்லை. பெரிய பேச்சாளரும் இல்லை’’ என்றார்.
கூட்டத்தில் சுமார் 1,500 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
ஆனால் மேடைக்கு முன்பு மட்டுமே கூட்டம் கூடி இருந்தது. பின்புறம் நாற்காலிகள் காலியாக கிடந்தன. பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக முண்டியடித்தபடி சென்றவர்கள் நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக போடியில் பாஜ சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள், ‘தேஜ கூட்டணியில் மீண்டும் ஓ.பி.எஸ். இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?’ என்று கேட்டதற்கு, ‘‘அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்’’ என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.