பாஜ கூட்டணி அரசு பீகாரில் 20 ஆண்டு ஆட்சி செய்தும் அவலநிலை ஏன்? காங். கேள்வி
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பு, நியாயமான ஆட்சேர்ப்பு தேர்வுகளைக் கோரி கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட பாட்னாவின் அதே தெருக்களில், பிரதமர் மோடியும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் வாக்குகளுக்காக ரோடு ஷோ செல்கிறார்கள். அதனால் தான் அவர்களிடம் 3 நேரடி கேள்விகளை கேட்கிறோம்.
உங்கள் ஆட்சியில், பீகாரில் ஏராளமான வினாத்தாள் கசிவுகள், ஆட்சேர்ப்பு-நுழைவுத் தேர்வு மோசடிகள் நடந்தன. பீகாரில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கடின உழைப்பும் எதிர்காலமும் ஏன் சமரசம் செய்யப்பட்டது? மக்கள் தொகையில் 64%, அல்லது தோராயமாக 9 கோடி மக்கள், இன்னும் ஒரு நாளைக்கு 67 ரூபாயில் மட்டுமே வாழ்கின்றனர்.
உங்கள் அரசாங்கத்தின் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் ஏன் இவ்வளவு மோசமான நிலையில் உள்ளது? மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சியை காட்டு ராஜ்ஜியத்துடன் ஒப்பிடுகிறீர்கள், ஆனால், தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, பீகாரில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 8 கொலைகள், 33 கடத்தல்கள் மற்றும் 133 கொடூரமான குற்றங்கள் நடக்கின்றன. இதெல்லாம் மங்களகரமான ஆட்சி என்பீர்களா?என்று கேள்வி எழுப்பி உள்ளார்.