எங்களை ஒருபோதும் பாஜ விழுங்கமுடியாது: மதுரை பிரசாரத்தில் எடப்பாடி ஆவேசம்
மதுரை: எங்களை ஒருபோதும் பாஜ விழுங்க முடியாது என மதுரை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்டத்தில் 2வது நாளாக நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் நேற்றிரவு எடப்பாடி பேசும்போது, ‘‘அதிமுக, பாஜ கூட்டணியால், அதிமுகவை பாஜ விழுங்கி விடும். அடிமைப்பட்டு விட்டோம் என்றெல்லாம் சொல்கின்றனர். எங்களை யாராலும், ஒருபோதும் விழுங்க முடியாது. அந்தந்த சூழ்நிலைக்காக கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி வேறு, கொள்கை வேறு. அதிமுக கொள்கையிலிருந்து ஒருபோதும் மாறாது’’ என்றார்.
எடப்பாடி பிரசாரத்துக் காக கோ.புதூர் பகுதியில் சாலையின் இருபுறமும் 75க்கும் மேற்பட்ட கடைகளை மறைத்து ஐகோர்ட் கிளை உத்தரவையும் மீறி, பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. புதூர் பஸ் ஸ்டாண்டின் சிமென்ட் தரைத்தளத்தை உடைத்து மிகப்பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது. மாநகராட்சியினருடன், போலீசாரும் இணைந்து கட்-அவுட்கள் மற்றும் பேனர்களை அகற்றினர்..
போலீசை சுற்றிவளைத்து தாக்கிய அதிமுகவினர்; விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு, நேற்று முன்தினம் இரவு, எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுகவினர், ஆட்களை சரக்கு வாகனங்களில் அழைத்து வந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், திருச்சுழி சாலையில் வாகனங்களை நிறுத்தி இறங்கி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அதிமுகவினர், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். இதை போலீஸ்காரர் ஒருவர், செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அப்போது அதிமுகவினர், வீடியோ எடுத்த காவலரை சூழ்ந்து தாக்கியதால் அவரது கையில் இருந்த செல்போன் கீழே விழுந்தது.இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓபிஎஸ் படத்துடன் தொண்டர்கள் வருகை
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்காக ஒத்தக்கடை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், மீனாட்சி மிஷன் அருகாமை ரிங்ரோடு வழியாக திருப்பிவிடப்பட்டதால், பொதுமக்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பிரசாரத்திற்கு வந்திருந்த அதிமுக தொண்டர்களில் சிலர் ஓபிஎஸ் படம் போட்ட பனியன்களை அணிந்து வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கோட்டையனுக்கு பதிலளிக்காத எடப்பாடி
கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், வரும் 5ம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன் என கூறியிருந்தார். இதுகுறித்து நேற்று பிற்பகலில் மதுரை ஓட்டலில் இருந்த எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘‘இந்த விவகாரம் குறித்து மாலையில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் பதில் அளிக்கிறேன்’’ என கூறியிருந்தார். ஆனால், மேலூர், ஒத்தக்கடை மற்றும் கோ.புதூரில் பிரசார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அவர் கூறியபடி, செங்கோட்டையன் குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.