147வது பிறந்த நாள் விழா திருச்சியில் பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: சமூக நீதி நாள் உறுதிமொழியும் ஏற்றார்
திருச்சி: திமுக சார்பில் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 17ம்தேதி கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் நேற்று மாலை நடந்தது. விழாவில், கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.
விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி, எம்பிக்கள், அதிகாரிகள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு முடிந்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து வரும் வழியில் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மற்றும் தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு முதல்வரை வரவேற்க திரண்டிருந்த மக்களில் சிலர், முதல்வரிடம் மனுக்கள் அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட முதல்வர், மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெஸ்டரி பள்ளி வழியாக கலெக்டர் அலுவலகம் வரை ‘ரோடு ஷோ’ சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற பொதுமக்களை பார்த்து முதல்வர் கை அசைக்க அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பலர் முதல்வரிடம் மனுக்களை அளித்தனர். இதை தொடர்ந்து தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன், சுயமரியாதை ஆளுமைத்திறனும் - பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்து கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் , மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என முதல்வர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், மா.சுப்பிரமணியன், ரகுபதி, மெய்யநாதன் மற்றும் எம்பிக்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, துரை வைகோ, அருண் நேரு, கவிஞர் சல்மா, எம்எல்ஏக்கள் செந்தில்பாலாஜி, பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், அப்துல் சமது, கதிரவன், தியாகராஜன், ஸ்டாலின் குமார், தமிழரசி மற்றும் கலெக்டர் சரவணன், மேயர் அன்பழகன், ஆணையர் மதுபாலன் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
* கரூரில் துணை முதல்வர் உதயநிதி சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேலத்திலிருந்து நேற்றுமுன்தினம் இரவு கரூர் வந்தார். அங்குள்ள ஓட்டலில் இரவு தங்கிய அவர், நேற்று காலை குளித்தலையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான மறைந்த குளித்தலை சிவராமனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சிவராமனின் மகனும், துணை முதல்வர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியுமான சீனிவாசனுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா உடனிருந்தனர். பின்னர் திருமாநிலையூரில் உள்ள பெரியார் சிலைக்கு துணை முதல்வர் உதயநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த உதயநிதி, பெரியாரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு அரசு அலுவலர்களுடன் சமூகநீதி நாள் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.