பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடன பெண்களுடன் போலீஸ் ஆபாச குத்தாட்டம்: எஸ்ஐ, காவலர் அதிரடி சஸ்பெண்ட்
தாதியா: மத்தியப் பிரதேசத்தில் பிறந்தநாள் விழாவில் நடன பெண்களுடன் போலீஸ் எஸ்ஐ ஒருவர் ஆபாசமாக நடனமாடிய காணொலி வெளியானதைத் தொடர்ந்து, அவர் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேச மாநிலம், தாதியா மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர், நடன பெண்களுடன் ஆபாசமாக நடனமாடும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தித் திரைப்படப் பாடல் ஒன்றுக்கு, இரு பெண்களுடன் உதவி ஆய்வாளர் சஞ்சீவ் கவுர் என்பவர் அருவருக்கத்தக்க ஆபாசமாக குத்தாட்டம் போடும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. இந்த காணொலி காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சூரஜ் வர்மா, காணொலியில் இடம்பெற்றிருந்த தாதியா சிவில் லைன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஞ்சீவ் கவுர் மற்றும் காவலர் ராகுல் பவுத் ஆகிய இருவரையும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், இதுகுறித்த அடுத்தகட்ட விசாரணை முடியும் வரை இருவரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கடந்த 2ம் தேதி காவலர் ராகுல் பவுத்தின் பிறந்தநாள் விழா தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவை கொண்டாட இரு நடன பெண்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அப்போது உதவி ஆய்வாளர் சஞ்சீவ் கவுர் மற்றும் சில ஆண்கள் நடன பெண்களுடன் முறையற்ற சைகைகளுடன் ஆபாசமாக நடனமாடியுள்ளனர். இந்த காணொலியை அங்கிருந்த யாரோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியதன் விளைவாக, தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சூரஜ் வர்மா கூறுகையில், ‘காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற முறைகேடான நடத்தையில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.