பறவைகள் சரணாலயங்களில் பிளாஸ்டிக் அகற்றும் இயக்கம்: தலைமை செயலாளர் தொடங்கி வைத்தார்
சென்னை: தமிழ்நாட்டில் 21 இடங்களில் உள்ள நீர்நிலைகளில், பறவை சரணாலயங்கள், பாதுகாப்பு காப்பகங்கள் மற்றும் முக்கிய ஈரநிலங்கள் அனைத்திலும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நேற்று பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் தூய்மை இயக்கம் தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் இந்த தூய்மை இயக்கத்தை தலைமை செயலாளர் சண்முகம் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, முதன்மைத் தலைமை வன அலுவலர் சீனிவாஸ் ரெட்டி, முதன்மை தலைமை வன அலுவலர் மற்றும் தலைமை வனவிலங்கு பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஜெயந்தி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ஏ.ஆர்.ராகுல் நாட், கியோருடன் பிற மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னையை போன்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், கரிக்கிலி, புலிகாட் ஏரி, வெட்டாங்குடி பறவைகள் சரணாலயம், கஞ்ஜிரங்குளம், சிற்றங்குடி மேலசெல்வனூர்-கீழசெல்வனூர் உள்ளிட்ட 21 பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் இயக்கம் தொடங்கப்பட்டது.