மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் ஆளுநருக்கு கெடு விதிக்க சட்டத்தில் இடமில்லை: தலைமை நீதிபதி கவாய் விளக்கம்
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூர்யாகாந்த் இன்று பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்றுடன் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கவில்லை.
அப்படியிருக்கையில், சட்டத்தில் இல்லாத ஒன்றை எப்படி செய்ய முடியும். எனவே நாங்கள் ஆளுநர்களுக்கான காலக்கெடுவை தளர்த்தியதோடு மட்டுமில்லாமல், மசோதா மீது முடிவெடுக்காமல் நீண்டகாலம் கிடப்பில் போட முடியாது என்று கூறி சமநிலைப்படுத்தி உள்ளோம். குறிப்பிட்ட நேரத்தில் ஆளுநர் மசோதா மீது முடிவெடுப்பதை தடுக்க பல காரணங்கள் இருக்கலாம்.
அரசியலமைப்பு என்பது அதிகாரங்களை பிரிக்கும் கொள்கையைின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதில் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் சட்டமன்றங்களிடமே உள்ளது. நீதித்துறை தலையிட முடியாது. பொதுமக்களின் நம்பிக்கையை காப்பதில் நீதித்துறைக்கு சுதந்திரம் அவசியம்.
இதை உறுதி செய்ய நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு நீடிக்க வேண்டும். இந்த காலத்தில் ஒரு நீதிபதி அரசுக்கு எதிராக உத்தரவிட்டால் மட்டுமே அவர் சுதந்திரமானவர் என நினைக்கிறார். இது தவறான அணுகுமுறை. வழக்கு தொடுப்பவர் அரசா, சாமானியனா என்பதை பார்க்காமல் ஆதாரங்கள், சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.