மசோதாக்களை நிலுவையில் வைத்து இருந்தால் ஆளுநரிடம் கேள்வி கேட்க எங்களுக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
புதுடெல்லி: மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் விதித்தது தொடர்பான விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று நான்காவது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அதேப்போன்று ஒன்றிய அரசுக்கு ஆதரவாக ஒடிசா, மகாராஷ்டிரா, அரியானா, கோவா ஆகிய மாநிலங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அவர்களது மாநிலங்கள் தரப்பில் வாதங்களை முன்வைத்தனர். அதில்,‘‘ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பலாம், அப்படி செய்யவில்லை என றால் அது சட்டத்திற்கு எதிரானது ஆகும்.
ஆளுநர் எந்த சூழ்நிலையில் ஒப்புதலை மறுக்க முடியும் என்பதை வரையறுக்க முடியாது. மசோதா ஒப்புதல் விவகாரத்தில் ஆளுநருக்கு இருக்கும் வாய்ப்புகள் தொடர்பான பிரிவு 200ல் எந்த கால நிர்ணயமும் வகுக்கப்படவில்லை. குறிப்பாக மாநில அரசு இயற்றும் மசோதாவை நிராகரிக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு அதிகாரம் உள்ளது என்பது தான் எங்களது தரப்பில் முக்கிய வாதங்களாக உள்ளது என்று தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘மசோதாவை காலவரையின்றி நிறுத்தி கிடப்பில் போட்டு வைத்திருக்கும் போது, ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள் என்று ஆளுநருக்கு நீதிமன்றம் கேள்வியெழுப்பி அதற்கான காரணத்தை கேட்க அதிகாரம் உண்டு என்று தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த மகாராஷ்டிரா வழக்கறிஞர், ‘‘மசோதா விவகாரத்தில் ஆளுநர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று மட்டும் தான் கேட்க முடியுமே தவிர, ஏன் கிடப்பில் போட்டு நிறுத்தி வைத்துள்ளீர்கள் என்று நீதிமன்றம் கேட்க முடியாது.
மசோதாவை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பத் தேவையில்லை என முடிவெடுப்பது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது ஆகும். எல்லா நோய்களுக்கும் உச்ச நீதிமன்றம் மட்டுமே மருந்தாக இருக்க முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒரே மாதிரியான வாதங்களை பல கோணங்களாக வைப்பதன் மூலமாக எதுவும் சரி என்று ஆகி விடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
குடியரசுத் தலைவர் முன்பாக ஒரு சட்ட மசோதா ஒப்புதலுக்கு வரும்போது, அவர் ஒன்றிய அமைச்சரவையின் கருத்தை கேட்டு அவர்களின் ஆலோசனைப்படி செயல்படுவார். அதேப்போன்று தான் மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆளுநர், மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி கருத்தின்படியும் தானே செயல்பட முடியும். அவர் அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவர். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது என்பது தான் எங்களது நிலைப்பாடாக உள்ளது.
மேலும் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்த பிறகு, ஆளுநர் அதில் காலவரையின்றி முடிவெடுக்காமல் இருக்க முடியுமா?. குறிப்பாக 2020ம் ஆண்டு ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால், அது 2025ம் ஆண்டு வரையில் கூட ஒப்புதல் இல்லாமல் கிடப்பில் இருந்தால், நீதிமன்றம் அதிகாரமற்றதாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?.அப்படி நினைத்துக் கூட பார்காதீர்கள். உங்கள் கூற்றுப்படி, மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு 200வது பிரிவின் கீழ் வீட்டோ அதிகாரம் உள்ளதா என்று சரமாரி கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு ஆதரவு வழக்கறிஞர்,‘‘வீட்டோ அதிகாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஒரு நேர்மையற்ற குணாதிசயமாகும். ஆளுநருக்கு நிறுத்தி வைக்க அதிகாரம் உள்ளது. ஆனால் வீட்டோ என்பது தனிப்பட்ட நலனுக்காக நாங்கள் பயன்படுத்தும் ஒரு வார்த்தையாகும். ஆளுநர் மசோதா விவகாரத்தில் அவ்வாறு செய்வது கிடையாது என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.