பீகார் வாக்காளர் பட்டியல் குளறுபடி விவகாரம்; காங்கிரஸ் கட்சி அளித்த 89 லட்சம் புகார்கள் நிராகரிப்பு: முறைப்படி சமர்ப்பிக்கவில்லை என தேர்தல் ஆணையம் பதில்
பாட்னா: பீகார் வாக்காளர் பட்டியலில் சுமார் 89 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் தவறாக இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அது தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் தெரிவித்தது. இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா, ‘காங்கிரஸ் கட்சி அமைதியாகத் தனது பணியைச் செய்து 89 லட்சம் புகார்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், எங்கள் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் புகார்களைச் சமர்ப்பிக்கச் சென்றபோது, அவற்றை அதிகாரிகள் வாங்க மறுத்துவிட்டனர். வரவிருக்கும் பீகார் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெல்வோம்’ என்று குறிப்பிட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக, பீகார் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 89 லட்சம் பெயர்களை நீக்கக் கோரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்குக் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்காளர் பதிவு விதிகள் 1960, விதி 13-இன் கீழ், படிவம் 7-ஐ பூர்த்தி செய்து மட்டுமே பெயர்களை நீக்கவோ சேர்க்கவோ ஆட்சேபணை தெரிவிக்க முடியும். அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, பிரிவு 31-இன் படி, உரிய பிரமாணப் பத்திரத்துடன் தங்கள் ஆட்சேபணைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த உரிய செயல்முறைகளைப் பின்பற்றவில்லை. அக்கட்சி குறிப்பிட்டுள்ள 89 லட்சம் வாக்காளர்கள் என்ற தரவும் சரிபார்க்கப்படாதது. இது தொடர்பாக தேர்தல் பதிவு அதிகாரி உரிய ஆய்வுக்குப் பிறகே தகுந்த முடிவை எடுப்பார்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 1ம் தேதியுடன் ஆட்சேபணைகளைத் தெரிவிப்பதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, 103 பெயர்களை நீக்கவும் 15 பெயர்களைச் சேர்க்கவும் என மொத்தம் 118 ஆட்சேபணைகளை உரிய முறையில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.