பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாட்டுக்கு வந்து மோடி பேச முடியுமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்
தர்மபுரி: பிரதமர் மோடி பீகாரில் வாக்கு அரசியலுக்காக, அங்கு சென்று நாடகத்தை நடத்தியிருக்கிறார். பீகாரில் பேசிய அதே கருத்தை இங்கே தமிழ்நாட்டில் வந்து பேச முடியுமா?, பேசுவாரா?, பேசக்கூடிய தைரியம் இருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வக்கீல் ஆ.மணி எம்பியின் மகன் விஜய் என்ற பிரகதீஸ்வரன்-மது பிரதிக்ஷா திருமண விழா, தர்மபுரி ஜோதி மஹாலில் நேற்று நடந்தது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: நேற்றைய தினம் (நேற்று முன்தினம்), அனைத்துக்கட்சிக் கூட்டத்தை சென்னையில் நடத்தி முடித்து விட்டு, நானும், திருமாவளவனும் மற்றவர்களும் இங்கு வந்திருக்கிறோம். அந்த கூட்டத்தில் முக்கியமான தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். அது என்ன என்பதும் உங்களுக்கு தெரியும். அடுத்த ஆண்டு நாம் எதிர்கொள்ள இருக்கக்கூடிய தமிழ்நாடு தேர்தலை அடிப்படையாக வைத்து வாக்காளர் பட்டியலில், ஏற்பட்டிருக்கக்கூடிய எஸ்ஐஆர் என்ற ஒரு திட்டத்தை மையப்படுத்தி, சீராய்வு என்ற பெயரில், சூழலில், ஒரு தீய செயலை, ஒரு சதிச் செயலைச் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. அதை தடுப்பதற்கான முயற்சியில், நம்முடைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து பேசி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அங்கே உரையாற்றிருக்கிற அத்தனை பேரும், நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும். உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, அதற்குரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும். பதற்றம் இல்லாத சூழலில்தான் அதை செய்ய வேண்டும். அப்படியில்லாமல், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், முழுமையான திருத்த பணிகள் செய்ய தேர்தல் ஆணையம் நினைக்கிறது. அதற்கு காரணம், உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் அது. அதைதான் பீகார் மாநிலத்தில் செய்தார்கள். இப்போது மற்ற மாநிலங்களிலும் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பீகாரில், இதை செய்ய நினைத்தபோது, தொடக்கத்திலேயே தமிழ்நாட்டில் இருந்து முதல் எதிர்ப்பு குரலை நாம் தான் பதிவு செய்திருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய, காங்கிரஸ் பேரியத்தின் இளந்தலைவராக விளங்கிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி, பீகாரின் இளம் சிங்கமாக இருக்கக்கூடிய தேஜஸ்வி, அந்த எஸ்ஐஆர்க்கு எதிராக அந்த மாநிலத்தில் பெரிய புரட்சியையே செய்தார்கள். அதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிற நிலையில், தேர்தல் ஆணையம் அதற்குரிய பதிலைச் சொல்லவில்லை. உரிய விளக்கத்தையும் சொல்லவில்லை. பீகார் போலவே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும், செய்ய நினைக்கிறார்கள்.
அதைத் தடுத்து நிறுத்தத்தான் நாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். நாம் நடத்திய கூட்டத்தில் கூட எதிர்க்கட்சியான அதிமுக பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இதில் கூட தன்னுடைய இரட்டை வேடத்தைக் காட்டியிருக்கிறார். பா.ஜ.,வுக்கு பயந்து, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார். அதே நேரத்தில், அதிமுக தொண்டர்களுக்காக ஒரு அறிக்கையையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இது எதை காட்டுகிறது? தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில், பழனிசாமிக்கு சந்தேகம் இருப்பதைத் தான் அது காட்டுகிறது. “பா.ஜ.,வின் பாதம்தாங்கி பழனிசாமி” என்பதை நொடிக்கு ஒருமுறை அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
பா.ஜ எப்படிப்பட்ட சதிச்செயலைச் செய்தாலும், அவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டைக் காட்டி பீகாரில் வெறுப்பு பேச்சைப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த பேட்டியை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள் - அதையெல்லாம் பார்க்கும்போது, எனக்கே பெருமையாக இருக்கிறது. தமிழ்நாடு எப்படியெல்லாம் தங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது - தங்களுடைய வாழ்க்கைத்தரத்தை எப்படியெல்லாம் உயர்த்தியிருக்கிறது என்று மிகத் தெளிவாக பீகார் மக்கள் தமிழ்நாட்டில் வந்து பணிபுரியக்கூடிய, தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய, வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அந்த பீகார் மக்கள் பேசியிருக்கிறார்கள்.
ஆனால், பிரதமர் பீகாரில், வாக்கு அரசியலுக்காக அங்கு சென்று நாடகத்தை நடத்தியிருக்கிறார். நான் கேட்கிறேன், பிரதமர் மோடி பீகாரில் பேசிய அதே கருத்தை, இங்கே தமிழ்நாட்டில் வந்து பேச முடியுமா? பேசுவாரா? பேசக்கூடிய தைரியம் இருக்கிறதா என்ற கேள்வியை தான் நான் கேட்க விரும்புகிறேன். யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை பரப்பினாலும், எவ்வளவு போலிச் செய்திகளை எல்லாம் அவர்கள் உருவாக்கினாலும், நான் தெளிவோடு சொல்கிறேன், 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும் என்று நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றைக்கு அனைத்து சேனலிலும் “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தது” என்ற செய்திதான் வரப்போகிறது. தமிழ்நாட்டு மக்கள் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையின் காரணமாக இதை நான் தெளிவோடு சொல்ல விரும்புகிறேன்.
2026 தேர்தல், தமிழ்நாட்டை பா.ஜ.- அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாக்கக்கூடிய தேர்தலாக அமைய போகிறது. கலைஞரின் உடன்பிறப்புகளாக இருக்கக்கூடிய நீங்கள் நிரூபிக்க வேண்டும். அதற்கான வெற்றிக்கு நீங்கள் உழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், சிவசங்கர், ராஜேந்திரன், தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* எஸ்ஐஆர் விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தன் இரட்டை வேடத்தைக் காட்டியிருக்கிறார்.
* பாஜவுக்கு பயந்து, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பயப்படுகிறார்.
* பாஜ-வின் பாதம்தாங்கி பழனிசாமி என்பதை நொடிக்கு ஒருமுறை அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
* சிப்காட் தொழிற்பூங்கா, தர்மபுரி பஸ்நிலைய பணிகளை முதல்வர் ஆய்வு
தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டத்தில், 1,733 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்று வரும் அலுவலகக் கட்டிடம், சிறு பாலங்கள், மழைநீர் வடிகால் பணிகள் போன்ற கட்டுமான பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதேபோல, தர்மபுரி நகரில் பென்னாகரம் மெயின்ரோட்டில், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில், தனியார் பங்களிப்புடன் ரூ.39.14 கோடி மதிப்பில், 10 ஏக்கர் பரப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று தர்மபுரி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.